விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியாக கொரோனா காலத்தில் உயர்ந்தது குக் வித் கோமாளி. இதற்கு முன் விஜய் டிவியில் சமையல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பல வந்திருந்தாலும், குக் வித் கோமாளிக்கு கிடைத்த ரசிகர்கள் வேறு எந்த சேனலிலும் நடக்காத ஒன்று. சமைக்க தெரியும் ஒருவர் சமைக்க தெரியாத நகைச்சுவை கலைஞர்கள் உடன் சேர்ந்து கொடுக்கப்படும் டாஸ்க்குகளை சம்பாதித்து சமைப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.

இதில் முதல் சீசனில் KPY பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி, தங்கதுரை ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்று நல்ல தொடக்கத்தை தந்தனர். பிக் பாஸில் சர்ச்சையை கிளப்பிய வனிதா விஜயகுமார் சீசன் 1 உடைய டைட்டிலை வென்று அவர் மேல் உள்ள சர்ச்சைகளை சற்று மாற்றினார். இப்படி வனிதா விஜயகுமார், நடிகை ஷகிலா, விசித்ரா ஆகியோர் மீது மக்களுக்கு இருந்த கண்ணோட்டத்தை மாற்றிய ஒரு ஸ்லோவாக் இருந்த குக் வித் கோமாளி தற்போது TRP ரேட்டிங் நோக்கி ஓடுகிறது.

இரண்டாவது சீசனில் கோமாளியாக சேர்ந்தார் சுனிதா. அதோடு இந்த சீசனில் புகழ், பவித்ரா மற்றும் தர்ஷா உடன் செய்த சேட்டைகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. இதில் தொடங்கி அவருக்கு நல்ல ரசிகர்கள் கிடைத்தது. மூன்றாவது சீசன் நல்ல போட்டியாக அமைந்தது.
நான்காவது சீசனில் கோமாளி சிவாங்கி குக்காக கலந்துகொண்டு புது மாற்றத்தை கொடுத்தார். இந்த சீசன் மற்ற சீசன்களை போல் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் தற்போதைய சீசனை விட நன்றாக வரவேற்க்கப்பட்டது. இந்த சீசனுடன் பெரிய மாற்றம் ஒன்று நடந்தது.

இரண்டு நடுவர்களில் செஃப் வெங்கடேஷ் பட் தான் கோமாளிகளுடன் இணைந்து நகைச்சுவை, நக்கல் செய்து கன்டென்ட் கொடுத்து வந்தார். குரேஷி மற்றும் புகழ் உடன் இணைந்து நகைச்சுவையாகவும் துடிப்பாகவும் இருந்ததை மக்கள் ரசித்து பார்த்தனர். ஆனால் சீசன் 5ல் அவர் இல்லாதது இந்த நிகழ்ச்சிக்கு பெரும் இழப்பாக இருக்கிறது.

இதற்கு முன் முக்கியமான பங்காக இருந்த பலர், இதே நிகழ்ச்சியை தயாரித்த நிறுவனம் சன் டிவியில் இணைந்ததால் அங்கு சேர்ந்துள்ளனர். அப்படி நடுவர் வெங்கடேஷ் பட், கோமாளி பரத் இடையே நடந்த சர்ச்சை பெரிதாக பேசப்பட்டது. பரத்தை நடுவர் வெங்கடேஷ் பட் தவறாக நடத்துவதாகவும் வந்த சர்ச்சை உடனடியாக தீர்க்கப்பட்டது. இந்த ஜோடிக்கு சர்ச்சையும் சிரிப்பும் கலந்தே இருப்பதும் ஒரு விதமான சாதகம் என்பது சமீபத்தில் தெரிகிறது.
சமையல் நிகழ்ச்சி என்பதை மறந்து TRPயை மட்டும் கருத்தில் கொண்டு உடல்மொழியை கிண்டல் செய்வதும், மக்களுக்கு பிடித்த போட்டியாளர்களை ஷோவில் வைத்து நன்றாக சமைக்கும் போட்டியாளர்களை எலிமினேட் செய்வது என இந்த சீசனில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்தந்த பிரபலங்களை வரவழைத்தால் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்று கணக்கிட்டு, ரியாலிட்டி ஷோக்கள் இயங்குவது புதிதல்ல. ஆனால் குக் வித் கோமாளி சீசன் 5 பெரியளவில் பார்க்கப்படுவதில்லை என்பதற்காக புரோமோ மற்றும் மற்ற வீடியோக்களில் குறிப்பிட்ட நபரை மட்டும் காட்டுவது மக்களுக்கு சற்றே எரிச்சலூட்டுவதாக உள்ளது. இது சமீபத்தில் இரண்டாம் வாரம் எலிமினேட் செய்யப்பட்ட வசந்த் வாசி வெளியே வந்து யூடியூபில் நேர்காணல் தந்திருப்பார். அவரை விட கம்மியான மதிப்பெண்ணில் உள்ள ஒரு போட்டியாளர் அதிகம் பார்க்கப்படுவதால் அவரை வெளியேற்றியதாக செய்தி உள்ளது.
இப்படி தற்போதைய சீசனில் சர்ச்சைக்கு குறையில்லாமல் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நடுவர் செஃப் வெங்கடைஷ் பட் நான்கு சீசன்களாக விஜய் டிவியில் பயணித்து திடீரென சன் டிவிக்கு சென்றதன் பின்னணியும் தொடர்ந்து பேசப்பட்டது. ஆனால் அதற்கான உண்மை காரணத்தை தெரிவித்த வெங்கடேஷ் பட், அந்த துளிர்விட்ட பிரச்சனையை நிறுத்தினார். அதோடு முடியாமல் தற்போது புதிய நடுவராக குக் வித் கோமாளியில் சேர்ந்துள்ள மாதம்பட்டி ரங்கராஜை சுற்றியும் சில பின்னடைவுகள் பேசப்படுகிறது.

வெங்கடேஷ் பட் இந்த ரியாலிட்டி ஷோவின் அடிப்படை நோக்கமும் அங்கு உள்ள கோமாளிகள் உடன் ஒரு நல்ல நட்பும் இருந்ததால் மிக இயல்பாக அவரால் பழகி நக்கலாக ஷோவை நடத்த முடிந்தது. ஆனால் என்னதான் இந்தியா முழுதும் பிசியாக வலம் வருபவராக இருந்தாலும் இந்த ஷோவின் நாடியை புரிந்துகொள்ள முடியாமல் நகைச்சுவையும் வராமல் தவித்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இது பார்ப்பதற்கு சங்கடமாக இருப்பது பெரிதாக இணையத்தில் பேசப்படும் ஒன்று.
மேலும் விஜய் டிவியில் மிக முக்கியமான அங்கமாக பல வருடங்களாக உள்ளவர் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுப்பாளராக இருப்பதை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த போட்டியின் யுக்திகளை முழுமையாக தெரிந்து புரிந்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மாதிரியான தோரணையில் இருந்தார்.

ஆனால் அவர் வெளியே அவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிகழ்ச்சியை போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க நினைத்தது பலருக்கும் கடுப்பாக அமைந்தது. அதே யுக்தியை குக் வித் கோமாளி போட்டியில் தான் ஒரு போட்டியாளர் என்றும் நல்ல வரவேற்பும் பின்னடைவுகள் உம் சேர்த்து வரும் என்பதை ஏற்க முடியாமல் உள்ளார். பிரியங்கா அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக எடுத்துச் செல்வது அவருக்கான வேலை, இந்த நிகழ்ச்சியில் அவருக்கான பங்கை மட்டும் செய்யாமல் அதிகமாக முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் VTV கணேஷ் இந்த சீசனில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர். அவருக்கான பங்கு அதிகம் கிடைக்காமல் பிரியங்கா உடன் ஒருவரையொருவர் கலாய்ப்பதும் நகைச்சுவையாக பேச முயற்சிப்பதும் செயற்கையாக அமைந்துள்ளது குக் வித் கோமாளியின் தொடர் ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது.
நகைச்சுவையான சமையல் போட்டியாக மட்டுமில்லாமல், 2020 மற்றும் 2021ல் அதிகம் பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் பட்டியலில் டிரெண்டிங்காக இருந்த நிகழ்ச்சி தற்போது பல காரணங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி முன்னேறுமா என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்திருப்பது சந்தேகமில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]