கள்ளிக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பொதுமக்கள் எல்லோரையும் பதைபதைக்கவைத்திருக்கிறது. இதுவரை 42 பேர் பலியாகியிருக்கும் நிலையில் மரண எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கள்ளச்சாரய விவகாரம் தொடர்பாக கண்டம் தெரிவித்திருந்த நடிகர் விஜய், இப்போது பாதிக்கப்பட்டவர்களையும், மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவும் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார்.

இதற்கிடையே பல்வேறு திரைப்பிரபலங்கள் கள்ளச்சாராய விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ‘’தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதேப்போல் இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா.இரஞ்சித்தும் அரசுக்கும் காவல்துறைக்கும் கண்டனம் தெரவித்துள்ளார். “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணம். சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது’’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பா.இரஞ்சித்.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]